மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பம்பாசி-சின்ச்வாட் பகுதியில் போக்குவரத்து போலிஸார் நடத்திய தீவிர வாகனச் சோதனையின் போது, போலி ‘எம்.எல்.ஏ’ ஸ்டிக்கர்களை ஒட்டிச் சென்ற இரண்டு கருப்பு நிற தொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் அடுத்தடுத்த நாட்களில் சிக்கின.
கருப்பு நிறச் சுழல் கண்ணாடிகள் அமைக்கப்பட்ட வாகனங்களைக் கண்டறிய நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், போசாரி மற்றும் வாகாட் ஆகிய பகுதிகளில் இந்த கார்கள் மறிக்கப்பட்டன. காரின் கண்ணாடியில் “மகாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினர்” என்ற அதிகாரப்பூர்வமான முத்திரைகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால், காரில் சென்ற நபர்களையோ அல்லது குடும்பத்தினரையோ விசாரித்த போது, அவர்களுக்கும் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது.
வி.ஐ.பி சலுகைகளைப் பெறவும், சுங்கச்சாவடிகள் மற்றும் சாலைகளில் முன்னுரிமை பெறவுமே இதுபோன்ற போலி ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையயடுத்து, போலி அடையாளத்தைப் பயன்படுத்தியதற்காக பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 205 மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
