டெல்லியைச் சேர்ந்த மோகன் குமார் – காஜல் தம்பதியினர், தங்கள் 9 மாத ஆண் குழந்தையுடன் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசுல்லாபூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, தாய் காஜல் குழந்தைக்குப் பாலூட்டியபடியே தூங்கியுள்ளார். அப்போது குழந்தை எதிர்பாராதவிதமாகத் தாயின் மடியிலிருந்து நழுவி, ரயிலின் அவசரக்கால ஜன்னல் வழியாக வெளியே தவறி விழுந்தது.
கழிப்பறை சென்று திரும்பிய தந்தை மோகன் குமார், குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தை ரயிலில் இருந்து விழுந்திருக்கலாம் என உணர்ந்து உடனடியாக ரயிலின் அவசரக்காலச் சங்கிலியை இழுக்க முயன்றார். ஆனால், அடர்ந்த காட்டுப் பகுதி எனக் கூறி சக பயணிகள் அவரைச் சங்கிலியை இழுக்க விடாமல் தடுத்துள்ளனர்.
இதையடுத்து பிரயாக்ராஜ் ரயில்வே போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடர்ந்த புதர்கள் மற்றும் தேங்கிய நீர்நிலைகளுக்கு இடையே போலிஸார் சுமார் 23 மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு, ஃபைசுல்லாபூர் ரயில்வே தண்டவாளம் அருகிலுள்ள புதரில் இருந்து குழந்தையின் உடலைக் கண்டெடுத்தனர். பிரேதப் பரிசோதனை செய்வதிலும் அதிகாரிகள் தாமதம் ஏற்படுத்தியதால் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
