வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் மாபெரும் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு எதிராகச் செயல்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாகக் கைது செய்து அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்ற டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவிற்கு முழு ஒத்துழைப்பு அளித்ததன் விளைவாக, அமெரிக்க உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டில் நிலவும் கடுமையான பெட்ரோல் விலையேற்றம் மற்றும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்கா இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஈரானுடனான போர் ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்வதால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்காவின் அவசரக்கால பெட்ரோலிய இருப்பும் 30 கோடி பேரல்களுக்குக் கீழ் கடுமையாகச் சரிந்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், நாட்டின் பொருளாதார மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வெனிசுலாவுடனான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
