மன்னிப்பு கேட்ட இன்ஃப்ளூயன்ஸர்..! ரீல்ஸ் ஆசையால் வந்த வினை… நடுரோட்டில் செய்த விபரீத செயல்… போலீஸ் கொடுத்த அதிரடி ஷாக்…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சமூக வலைத்தளங்களில் பிரபலமான இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் ‘ஜீப்ரா கிராஸிங்கில்’ படுத்துக்கொண்டு போட்டோஷூட் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் உள்ள லான்டர்ன் சதுக்க சிக்னலில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்த நேரத்தில், பிரக்ருதி கௌர் என்ற அந்தப் பெண் சாலையின் நடுவே படுத்து புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக அவர் செய்த இந்த செயலின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்து விதிகளை மீறும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். பொது இடங்களிலும், அதிக போக்குவரத்து உள்ள சாலைகளிலும் ரீல்ஸ் அல்லது வீடியோக்கள் எடுப்பது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என காவல் ஆணையர் சந்தோஷ் குமார் சிங் எச்சரித்திருந்த நிலையில், இந்த விதிமீறல் தொடர்பாக போலீசார் அந்தப் பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

   

காவல்துறையின் விசாரணை மற்றும் பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு, அந்த இன்ஃப்ளூயன்ஸர் தனது செயலுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். தனது போட்டோஷூட் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தனக்கு இல்லை என்று விளக்கம் அளித்த அவர், தனது தவறை உணர்ந்து கொண்டதாகவும், இனிமேல் பொது இடங்களில் இதுபோன்று ஆபத்தான முறையிலும், போக்குவரத்து விதிகளை மீறியும் வீடியோக்களை எடுக்க மாட்டேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.