தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பின்னர் ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார். அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடித்ததன் மூலமும், அதனைத் தொடர்ந்து வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலமும் தமிழ் சினிமாவின் டாப் கியரில் தனது மார்க்கெட்டை வலுவாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
சினிமா வெற்றிகள் மற்றும் சர்ச்சைகளைக் கடந்து எப்போதுமே செய்திகளில் இருக்கும் த்ரிஷா, தற்போது பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த மிக முக்கியமான ‘பெரிமெனோபாஸ்’ நிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். பொதுவாக, பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்றுவிடும் ‘மெனோபாஸ்’ நிலைக்கு முந்தைய காலகட்டத்தைத்தான் மருத்துவ உலகம் பெரிமெனோபாஸ் என்கிறது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளைப் பொதுவெளியில் பேசத் தயங்கும் சூழலில், த்ரிஷாவின் இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தன் பதிவில் பெரிமெனோபாஸ் நிலையை த்ரிஷா மிகவும் எளிய முறையில் விளக்கியுள்ளார். “பெரிமெனோபாஸ் என்பது, உங்கள் உடலில் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் குறைந்து, எதைப் பற்றியும் கவலைப்படாத ஹார்மோன்கள் உங்கள் உடலை ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலை என்று ஒருமுறை மருத்துவ நிபுணர் ஒருவர் விளக்கியதைக் கேட்டிருக்கிறேன். இந்த நிலையை இதைவிட யாராலும் இவ்வளவு சிறப்பாக விளக்கிவிட முடியாது” என்று த்ரிஷா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களின் அளவு பெருமளவில் மாறுபடும் இந்த காலகட்டத்தில், மன அழுத்தம், உடல் சோர்வு, திடீர் கோபம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பல சவால்களைப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும் மெனோபாஸ் நிலையை நோக்கி உடல் நகர்வதற்கான இந்த ஆரம்பக் கட்டத்தைப் பற்றிப் பேசுவது இன்றும் சமூகத்தில் ஒருTaboo-வாகவே, அதாவது பேசக் கூடாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், த்ரிஷா போன்ற ஒரு டாப் ஸ்டார், பெண்கள் சந்திக்கும் இந்த இயல்பான உயிரியல் மாற்றத்தைப் பற்றி மிகவும் நேர்மறையாகவும் வெளிப்படையாகவும் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. பெண்களின் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள த்ரிஷாவின் இந்த துணிச்சலான பதிவை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
