கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டார கரையை சேர்ந்த ஷாஜி என்பவருடைய மனைவி மினி (42). இவர்களுக்கு நிமிஷா என்ற மகள் உள்ளார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். பிறகு விடுமுறை முடிந்த நேற்று முன்தினம் மாலை நிமிஷா சேலத்துக்கு புறப்பட்ட நிலையில் அவரை வழி அனுப்பி வைப்பதற்காக மினியும் ஷாஜியும் கொட்டாரக்கரை ரயில் நிலையத்திற்கு சென்று இருந்தனர். ரயில் வந்ததும் மகளின் பொருட்களை வைப்பதற்காக மினி ரயிலில் ஏறினார்.
அவர் பொருட்களை வைத்துக் கொண்டிருந்தபோது ரயில் புறப்பட்டதால் இதனை எதிர்பார்க்காத மினி உடனே ஓடும் ரயிலில் இருந்து இறங்கினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே கணவர் கண் முன்னே உடல் நசுங்கி துடிதுடிக்க உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து மினியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
