அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் ரோஸ்வெல் நகரில் அமைந்துள்ள பார்க்கர் – சேஸ் மழலையர் பள்ளியில், ஆசிரியைகளே பச்சிளம் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளி வகுப்பறையில் நடைபெற்ற நிகழ்வுகளை ஆன்லைன் நேரலை மூலமாகத் தற்செயலாகக் கவனித்துக்கொண்டிருந்த பெற்றோர் ஒருவர், அங்கிருந்த இரண்டு ஆசிரியைகள் குழந்தைகளைப் பிடித்துத் தள்ளுவதும், குத்துவதும், ஏன் ஒரு குழந்தையின் கையின் மீது மிதிப்பதையும் கண்டு அதிர்ந்துபோனார்.
உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸைனா அல்-ஓஸ்த்வானி மற்றும் சோரியானா பிரிசெனோ ஆகிய இரண்டு ஆசிரியைகளும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு முதல் குற்றப்பிரிவு குழந்தை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பு இப்பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய முயன்றாலும், பள்ளி நிர்வாகம் அபராதம் செலுத்தித் தப்பித்த விவகாரமும், நீதிபதி விலகியதும் பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளிகளில் இதுபோன்ற கொடூரங்கள் நேரலை கேமரா மூலம் வெளிச்சத்திற்கு வந்திருப்பது உலகெங்கிலும் உள்ள பெற்றோர்களைப் பதற வைத்துள்ளது.
