புகழ்பெற்ற கவிஞரான கண்ணதாசன் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இவர் 4000 மேற்பட்ட கவிதைகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். கடந்த 1980-ஆம் ஆண்டு கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் மதுரை வீரன், ராஜா தேசிங்கு, தெனாலிராமன், மன்னாதி மன்னன், இல்லற ஜோதி, லட்சுமி கல்யாணம் உள்ளிட்ட படங்களுக்கு கண்ணதாசன் கதை வசனம் எழுதியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் சிவகங்கை சீமை, வானம்பாடி, கவலை இல்லாத மனிதன், கருப்பு பணம், மாலையிட்ட மங்கை, ரத்த திலகம் உள்ளிட்ட படங்களை கண்ணதாசன் தயாரித்தார். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், சிற்றிலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றை கண்ணதாசன் எழுதியுள்ளார். இதே போல தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழியில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். காதல் மன்னன், கண்ணகி, காதலா காதலா, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட படங்களை எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்துள்ளார். முக்கியமாக தமிழ் தாய் வாழ்த்து பாடலான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன ராகத்தில் இசை கோர்ப்பு செய்தவர் விஸ்வநாதன் தான். இதனையடுத்து இளையராஜா, கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ் விஸ்வநாதன் பாடல்களை பாடியுள்ளார்.
எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான பாடல்கள் தனித்துவமான தன்மை கொண்டிருக்கும். கடந்த 2003-ஆம் ஆண்டு எம்.எஸ் விஸ்வநாதனுக்கு இசை பேரறிஞர் விருது வழங்கப்பட்டது. பின்னர் கலை மாமணி விருதும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்னவென்றால் கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். எம்.எஸ் விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி பிறந்துள்ளார். இன்று இரண்டு ஜாம்பவான்களும் தங்களது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.