தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கூடுதல் தொகுதி கேட்டாலே கூட்டணிக்கு சிரமம் வந்துவிடுமா? அப்படி என்றால் நாங்கள் எதுவுமே கேட்கக் கூடாதா என கே எஸ் அழகிரி வினவி உள்ளார். அதிகார பகிர்வை கேட்பது காலத்தின் தேவையாக கருதுவதாக கூறிய அவர், கூட்டணி கட்சிக்கு எதுவும் கிடைக்காது என்றால் இதற்குப் பெயர் கூட்டணியே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணியால் ஒரு தரப்பு மட்டுமே வலிமை அடைந்து கொண்டே போவது சரி இல்லை என்றும் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு திமுகவிலிருந்து காங்கிரஸ் கூட்டணி விலக உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் எனவும் தெரிகிறது.
