தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சமீபத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் சூசகமாக தெரிவித்து இருந்தார். ஏறத்தாழ அதிமுக கூட்டணியில் இணைய விஜய்க்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் கூட்டணி குறித்து மௌனம் காத்து வருகின்றார்.
இந்நிலையில் முதல்வர் ஆக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி ஒருவேளை அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வெற்றி பெற்றால் விஜய்யையும் ஓரம் கட்டி விடுவார் என்றும் விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். தாம், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்தால் இபிஎஸ் இன் பதவிக்கு ஆபத்து என்பதால் தான் எங்களை நீக்கிவிட்டார். கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளி என திண்டுக்கல் சீனிவாசன் கூறியதை சுட்டி காட்டினார். மேலும் தமிழ்நாடு அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கையை நேர்மறையாக பார்க்கலாம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
