ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டம் ஷெர்கர் பகுதியில், ஏழை பெண் ஒருவர் மீது அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அந்த நபர் பிளாஸ்டிக் குழாயால் அப்பெண்ணை இரக்கமின்றி கொடூரமாக அடித்துள்ளார். அத்தாக்குதலின் போது அப்பெண் தன்னை விட்டுவிடுமாறு கதறி அழுதும், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தொடர்ந்து தாக்கியுள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில் பெண் மீது நடத்தப்பட்ட இந்த அராஜகத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், குற்றவாளி மீது ராஜஸ்தான் போலீசார் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் இணையவாசிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
