இந்திய அரசியலில் எளிமையின் சிகரமாகத் திகழ்ந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கக்கன் போன்ற மாபெரும் தலைவர்களின் வரிசையில், தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த இவர், அரசியலில் ஒரு அதிசயமான ஆளுமையாவார்.
மேலும் பதவி, பணம், புகழ் என எதற்கும் ஆசைப்படாத இவர், தனக்குக் கிடைத்த ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை மற்றும் தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதின் மூலம் கிடைத்த 10 லட்ச ரூபாயையும் அடுத்த கணமே கட்சிக்கும், அரசு நிவாரண நிதிக்கும் வழங்கி நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். இன்றைய நவீன அரசியலில் பல தலைவர்கள் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து வரும் நிலையில், ஐயா நல்லகண்ணு ஒரு ரூபாய் கூட சொந்தச் சொத்து சேர்க்காமல் வாழ்ந்தவர்.
இந்நிலையில் சொந்த வீடோ அல்லது காரோ இல்லாத இவர், தனக்குக் கிடைத்த தியாகிகள் ஓய்வூதியத் தொகையான ரூ.2,000-ஐக் கொண்டே தனது எளிய வாழ்க்கையை நடத்தினார். எப்போதும் வெள்ளை வேட்டி, சட்டையில் காட்சியளிக்கும் இவர், அரசு பேருந்துகளில் பயணம் செய்வதையும், உடல்நலக் குறைவின் போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் தனது கொள்கையாகக் கொண்டிருந்தார். இத்தகைய தன்னலமற்ற தலைவர்கள் இனி வருவது கடினம் என்பது நிதர்சனமான உண்மை.
