விஜய் கட்சியுடன் இரகசிய பேரம்?…. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய புள்ளி… கொங்கு மண்டலத்தில் பரபரப்பு…..!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

திமுகவில் இருந்து ஈரோடு மாவட்டப் பொறுப்பாளராகச் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் பதவி பறிக்கப்பட்டுள்ள சம்பவம், கொங்கு மண்டல அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த இவர், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் பதவியைப் பெற்றார். எனினும், அன்றிலிருந்தே இவருக்கும் ஈரோடு மாவட்ட திமுகவின் மூத்த முகமான அமைச்சர் சு.முத்துசாமிக்கும் இடையே தீவிர உள்கட்சி மோதலும் பனிப்போரும் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உள்கட்சிப் பூசலின் காரணமாகவே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் திமுக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்ததாகக் கட்சி தலைமை கருதிய நிலையில், தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதவிப் பறிப்பிற்கான முக்கியக் பின்னணியாக, தோப்பு வெங்கடாசலம் தமிழக வெற்றிக் கழகத்துடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தனக்கான ஆதரவுத் தளத்தைச் தக்கவைத்துக் கொள்ளவும், உள்கட்சி எதிர்ப்புகளைச் சமாளிக்கவும் அவர் தவெகவிற்குத் தாவ முயன்று வருவதாகக் கட்சி மேலிடத்திற்குச் செய்திகள் சென்றுள்ளன. இதனால் அதிருப்தியடைந்த திமுக தலைமை, கட்சி ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் உடனடியாக அவரது பதவியைப் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அரசியல் மாற்றம் ஈரோடு மாவட்ட திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.