“ரயில் பயணிகளே உஷார்…! ஆன்லைன் டிக்கெட்டில் இந்த ஒரு தப்பு இருந்தா… மொத்த காசும் காலி… எக்ஸ்பிரஸ் இரயிலின் நடந்த வைரல் சம்பவம்…!!”

By Swetha on ஆனி 28, 2026

Spread the love

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏற்படும் ஒரு சிறிய தவறு கூட எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பெங்களூரிலிருந்து நாக்பூருக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் இரயிலின் 2AC வகுப்பில் ஜூன் 23, 2026 அன்று ரமாகாந்த் என்ற பயணி பயணம் செய்துள்ளார். டிக்கெட் பரிசோதனையின் போது, அவரது டிக்கெட்டில் வயது 24 என்பதற்குப் பதிலாக தவறுதலாக 1 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், டிக்கெட் பரிசோதகர் அவருக்கு 7,035 ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்தத் தவறு முற்றிலும் எதிர்பாராமல் தற்செயலாக நடந்தது என்றும், தவறான வயதைக் குறிப்பிட்டதால் தமக்குக் கட்டணத்தில் எந்தவித சலுகையோ அல்லது தள்ளுபடியோ கிடைக்கவில்லை என்றும் அந்தப் பயணி விளக்கமளித்துள்ளார். மேலும், அவரிடம் உண்மையான பெயரையும் வயதையும் நிரூபிக்கக்கூடிய அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகளும் இருந்தன. ஆனாலும், இரயில்வே அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளாமல், அவரது டிக்கெட்டின் அசல் விலையான 3,589 ரூபாயுடன் அபராதத்தையும் சேர்த்து, மொத்தம் 10,624 ரூபாயை வசூலித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பயணி, இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் இரயில்வே அமைச்சகத்தைக் கேள்வி எழுப்பியதோடு புகார் அளித்தார்.

   

பயணியின் புகாருக்கு விளக்கம் அளித்த இரயில்வே நிர்வாகம், டிக்கெட்டில் உள்ள தகவல்களும் பயணியின் உண்மையான விபரங்களும் மாறுபட்டதால், இரயில்வே சட்டம் 1989-இன் பிரிவு 138-இன் படி அவர் முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்ததாகக் கருதப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. டிக்கெட் முன்பதிவு செய்த பின்னர் அதில் உள்ள விபரங்களைச் சரிபார்ப்பது பயணிகளின் கடமை என்றும், ஏதேனும் தவறுகள் இருந்தால் இரயில் புறப்படுவதற்கு முன்பாகவே அருகில் உள்ள பிஆர்எஸ் கவுண்ட்டருக்குச் சென்று திருத்தம் செய்திருக்க வேண்டும் என்றும் இரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்தச் சம்பவம் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.