படிக்கட்டில் இருந்து எட்டி உதைக்கப்பட்ட 2 வயது சிறுமி… சமூக வலைதளங்களை உலுக்கிய வீடியோவின் அதிர்ச்சி திருப்பம்… அங்கன்வாடியில் நடந்த கொடூரம்…!

By SATHISH R on ஆனி 28, 2026

Spread the love

நவிமும்பை பன்வெல் அருகே உள்ள நந்த்காவ் அரசு அங்கன்வாடி மையத்தில், 2 வயது சிறுமியை பெண் ஒருவர் காலால் எட்டி உதைத்து படிக்கட்டில் தள்ளும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோ ‘அங்கன்வாடி ஊழியரின் கொடூர செயல்’ என்ற தவறான தலைப்புடன் வேகமாக பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குழந்தையைத் தாக்கியது அங்கன்வாடி ஊழியர் அல்ல, அச்சிறுமியின் சொந்தத் தாய் தான் என்ற அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வரப்பட்ட அந்த இரண்டு வயது சிறுமி, அங்கே அமைதியாக அமராமல் தொடர்ந்து அடம் பிடித்து அழுதுகொண்டே இருந்துள்ளார். குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாததால் மிகுந்த ஆத்திரமடைந்த அவளது தாய், சற்றும் யோசிக்காமல் தன் குழந்தையை காலால் எட்டி உதைத்துள்ளார். தாயின் இந்த திடீர் தாக்குதலால் நிலைதடுமாறிய அந்த சிறுமி, படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த நபர் ஒருவர் இச்சம்பவத்தை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது உண்மை நிலை அறியப்படாமல் தவறான வதந்தியுடன் காட்டுத்தீயாக பரவியது தெரியவந்துள்ளது.

   

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் வரவழைத்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், குழந்தைகளிடம் இது போன்ற வன்முறையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் கவுன்சிலிங் வழங்கி எச்சரித்து அனுப்பினர். விசாரணையின் போது தாய் தனது கடுமையான தவறை உணர்ந்து, கண்ணீர் மல்க போலீசாரிடம் மன்னிப்பு கேட்டதால், அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாமல் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.

   

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பரவிய இந்த வதந்தி குறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி அதிதி தட்கரே தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். அதில், “மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நமது அங்கன்வாடி ஊழியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடனும் அன்புடனும் சேவை செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் உண்மை நிலையைச் சரியாக ஆராயாமல், அவர்கள் மீது இவ்வாறு அவதூறு பரப்புவது முற்றிலும் தவறானது” என்று பதிவிட்டு, இந்த தவறான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.