அதிமுகவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனப் பட்டியல் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சி.வி.சண்முகத்தின் பெயர் இந்தப் பட்டியலில் விடுபட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக எழுந்த அதிருப்திகளைத் தொடர்ந்து, அண்மையில் மூத்த தலைவர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையின் பின்னரே புதிய பட்டியல் வெளியானது. இதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்பட்டன. ஆனால், ஜெயலலிதா காலத்திலிருந்தே விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய முகமாக விளங்கிய சி.வி.சண்முகத்திற்கு எவ்விதப் பொறுப்பும் தரப்படவில்லை
கட்சி முடிவுகள் மற்றும் கூட்டணி தொடர்பான விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே சி.வி.சண்முகம் ஓரங்கட்டப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பதவிகளை அவர் மீண்டும் வலியுறுத்திய நிலையில், “முதலில் இணைந்து செயல்படுங்கள், பதவிகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” எனத் தலைமை எடுத்த முடிவால் அவர் தற்பொழுது பொறுப்புகள் இன்றித் தவித்து வருகிறார்.
