உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், தனது கணவரைப் பிரிந்து காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்து வந்த மீனு என்ற பெண், தனது இரண்டு வயது ஆண் குழந்தை வருணைத் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் குழந்தை உடல்நலக் குறைவால் திடீரென இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அது திட்டமிட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தை சுரேந்திரின் அண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடும்பத் தகராறு மற்றும் கணவரின் குடிப்பழக்கம் காரணமாக மீனு தன் குழந்தைகளுடன் தனியாக வாடகை அறை எடுத்து வசித்து வந்ததும், அப்போது வேறொரு இளைஞருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூரக் கொலையில் மீனு மற்றும் அவரது காதலனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட தாயைக் கைது செய்து காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திடீர் உடல்நலக் குறைவு என்று நாடகமாடி, பெற்ற குழந்தையையே தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற இந்த கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
