டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வடமாநிலங்களில் பிறந்திருந்தால் நிச்சயம் இந்தியாவின் பிரதமராகி இருப்பார் என்று புகழாரம் சூட்டினார். மேலும், 1980-களில் அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்களின் கனவு நாயகனாக வைகோ விளங்கியதாகக் குறிப்பிட்ட அவர், 82 வயதிலும் அவருடைய பேச்சிலும் செயல்பாட்டிலும் அதே வீச்சு குறையாமல் இருப்பதாகப் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் வைகோ ஒரு நிகரற்ற பேச்சாளராகத் திகழ்ந்து வருகிறார் என்று புகழந்தார். மாநிலக் கட்சித் தலைவராக இருந்தாலும், தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் வியக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய உரைகளையும் அவரது ஆளுமையையும் சுட்டிக்காட்டி திருமாவளவன் தனது உரையில் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்.
