மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகியோர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இரவு ஒரு விருந்துக்குப் பிறகு தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களுக்குக் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நான்கு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறை தனது முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதில், உயிரிழந்தவர்களின் உடலில் எந்தவிதமான “பாக்டீரியா தொற்று” இருந்ததற்கான ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அவர்களின் இரத்த மாதிரிகளில் பாக்டீரியாக்கள் எதுவும் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணங்களுக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குடும்பத்தினர் சாப்பிட்ட ‘சிக்கன் புலாவ்’, தர்பூசணி மற்றும் குடிநீர் போன்ற உணவு மாதிரிகள் ஆய்வுக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆய்வகத்தின் இறுதி அறிக்கை வந்த பிறகுதான், உணவில் ஏதேனும் விஷத்தன்மை இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெளிவாகத் தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
