போலி நம்பர் பிளேட்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை… மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் கொலையில் அதிர வைக்கும் பின்னணி..!!

By Swetha on வைகாசி 7, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, போலி பதிவெண் கொண்ட ஒரு கார் அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்த கட்டாயப்படுத்தியது. அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், மிக அருகாமையில் இருந்து  காரின் இடதுபுறமாக சரமாரியாகச் சுட்டனர். குறைந்தது நான்கு குண்டுகள் பாய்ந்ததில், அவரது நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, கொலையாளிகள் தாங்கள் வந்த போலி பதிவெண் கொண்ட காரை அங்கேயே விட்டுவிட்டு, மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். ஆரம்பகட்ட விசாரணையில், தாக்குதலுக்கு நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. தப்பியோடியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களில் பதிவெண்கள் இல்லை என்றும், கைப்பற்றப்பட்ட காரின் சேஸ் எண்  சிதைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொலையாளிகள் சுமார் 40 நிமிடங்கள் அந்தப் பகுதியில் காத்திருந்து இந்தத் திட்டமிட்ட கொலையைச் செய்துள்ளனர்.

   

சந்திரநாத் ரத் முன்னாள் விமானப்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படுகொலையில் ‘கிளாக் 47எக்ஸ்’ போன்ற அதிநவீன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. இது சாதாரண குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதம் அல்ல என்பதால், இதில் தொழில்முறை கூலிப்படையினருக்குத் தொடர்பு இருக்கலாம் எனப் புலனாய்வுத் துறையினர் கருதுகின்றனர். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது திரிணாமுல் காங்கிரஸின் சதி என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.