ஜங்காம் மாவட்டம், பச்சன்னபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஓபுல் கேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்தர் ரெட்டி. இவருக்கும் மாதவி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மகேந்தர் ரெட்டிக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறி மாதவி அவரைக் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பெரிய சண்டையாக மாறியுள்ளது.
ஆத்திரமடைந்த கணவன் மகேந்தர் ரெட்டி, மனைவி மாதவியை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த வன்முறைத் தாக்குதலில் மாதவியின் கைகள் மற்றும் கால்கள் இரண்டும் உடைந்தன. அதோடு நின்றுவிடாமல், தனது மனைவி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையிலும், மகேந்தர் ரெட்டி தனது இரண்டு குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக உடன் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
படுகாயமடைந்த மாதவி இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். தனது கணவர் தன்னைக் கொலை செய்ய முயற்சித்துப் பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும், தனது இரண்டு குழந்தைகளையும் தன்னிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றுவிட்டதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
