2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தேர்வுப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த வேட்பாளர் நேர்காணலில், கட்சித் தலைவர் விஜய் தனது பழைய ‘படைத்தளபதிகளுக்கு’ முன்னுரிமை அளித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலர் விருப்பமனு அளித்திருந்த போதிலும், கடந்த 30 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் விசுவாசமாகப் பயணித்த நிர்வாகிகளுக்கே தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் சேலம் பார்த்தீபன், கோவை சம்பத், அம்பத்தூர் பாலமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த நேர்காணலுக்கு அழைக்கப்பட்டது, விசுவாசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது. தொண்டர்களின் விசுவாசத்தை ஒருபுறம் கவனித்தாலும், வேட்பாளர்களின் தகுதி மற்றும் களப்பணிகள் குறித்தும் விஜய் மிகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து நேர்காணலுக்கு வருபவர்களிடம் தொகுதியின் வரலாறு, அங்குள்ள முக்கியப் பிரச்சினைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் மேற்கொண்ட மக்கள் நலப் பணிகள் மற்றும் மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு குறித்து ஆழமான கேள்விகளை விஜய் முன்வைக்கிறார்.
இதனால் மற்ற கட்சிகளைப் போல் தேர்தல் நேரத்தில் வருபவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், பல ஆண்டுகளாகத் தன்னுடன் நிழலாகப் பயணித்த ரசிகர்களையே தலைவர்களாக மாற்ற விஜய் எடுத்துள்ள இந்த முடிவு, தவெக தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
