மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல்-ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக உலகளாவிய எரிவாயு மற்றும் எல்.என்.ஜி இறக்குமதி பாதிக்கப்பட்டு, இந்தியாவில் கடும் எரிவாயு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
இதனால் சிஎன்ஜி மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதுடன், கத்தாரில் இருந்து வரும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதால் நாட்டின் கையிருப்பு சில வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
இந்த எரிவாயு நெருக்கடி வீடுகளின் சமையலறை முதல் மயானங்கள் வரை எதிரொலிக்கிறது. குறிப்பாக புனே போன்ற நகரங்களில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நகராட்சி நிர்வாகம் எரிவாயு அடிப்படையிலான தகன சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் தொழில்துறைக்கான எரிவாயு கட்டணம் ஒரு க்யூபிக் மீட்டருக்கு 40 ரூபாயிலிருந்து 119 ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளிலும், இறுதிச் சடங்கு போன்ற உணர்வுப்பூர்வமான சேவைகளிலும் ஏற்பட்டுள்ள இந்த முடக்கம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
