பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சௌக் பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் கார் ஒன்றின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அபோட்டாபாத்தை சேர்ந்த எஹ்சான் ஜாஃபர் என்ற தொழில்நுட்ப வல்லுநரால் வடிவமைக்கப்பட்ட இந்த காரை, பத்திரிகையாளர் முஹம்மது ஆலிஜா என்பவர் பொதுமக்களுக்கு காணொளி வாயிலாக விளக்கிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சீராகச் சென்ற வாகனம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்தது. உள்ளே அமர்ந்திருந்த பத்திரிகையாளர் உடனடியாக ஹேண்ட்பிரேக்கை இழுத்து காரை நிறுத்த முயன்றும் பலனின்றி, அந்த வாகனம் தறிகெட்டு ஓடி அங்கிருந்த காவல்துறை வாகனத்தின் மீது பலமாக மோதி நின்றது.
நவீன தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த சோதனை முயற்சி, எதிர்பாராத விபத்தில் முடிவடைந்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது. விபத்து நடந்த அந்த பரபரப்பான தருணங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள், “பாகிஸ்தானில் திறமைசாலிகளுக்கா பஞ்சம்?” என்று மிகவும் கிண்டலான மற்றும் நகைச்சுவையான தலைப்புகளைப் பதிவிட்டு, இந்த நிகழ்வை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
