திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா உள்ளிட்ட நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று, 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஆள் அரவமற்ற காட்டுப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்பெண்ணை மிரட்டி ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தியதோடு, அதனைத் தங்கள் அலைபேசிகளில் ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர், தாங்கள் கூறுவதைக் கேட்காவிட்டால் இந்த காணொளிகளை இணையத்தில் பரப்பிவிடுவதாகக் கடுமையாக அச்சுறுத்தி, அவரிடமிருந்த அலைபேசி மற்றும் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் நெல்லை மாவட்டக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட மூன்று பேரைக் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்திய அலைபேசிகளை மீட்டனர். நெல்லை மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
