உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து பசுவின் கோமியம் லிட்டர் ரூ.10 என்ற விலையில் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இயற்கை விவசாயத்திற்குத் தேவையான வழிவகைகளும் செய்யப்படுகின்றன.
சுமார் 300 கிராமப்புற பெண்கள் பங்கேற்கும் இத்திட்டத்தில், கோமியத்தைச் சேகரித்து வழங்கும் சேமிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் பசு கோமியத்துடன் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டு, இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்பட உள்ளன. இது பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்பையும், கூடுதல் வருமானத்தையும் ஈட்டித் தரக்கூடிய ஒரு சிறந்த நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கமே ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மண்ணிற்கு ஏற்படும் தீமைகளைத் தடுத்து, இயற்கை முறை விவசாயத்திற்கு விவசாயிகளை மாற்றுவதாகும். கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மண்ணின் வளத்தைப் பாதுகாப்பதோடு, விளைபொருட்களின் தரத்தையும் உயர்த்தும். இச்சோதனைத் திட்டம் வெற்றி பெறும்போது, அம்மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இயற்கை விவசாய புரட்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
