கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் அமுதன் (20), சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10 அன்று மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, அமுதனை கல்லூரியின் பின்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்று சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்து அறைக்குத் திரும்பிய அமுதனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக செட்டிப்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவரின் நண்பர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 17 வயது சிறுவன் உட்பட ஆறுமுகன், அரவிந்த், சிவரோகித் மற்றும் மணிபாலு ஆகிய 5 மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணவனின் உடலானது பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்பிரச்சனை சட்டமன்றத்திலும் எதிரொலித்த நிலையில், போதைப்பொருள் விற்பனை குறித்து போலிசாருக்குத் தகவல் அளித்த காரணத்தாலேயே மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் இதற்கு ஆளும் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இது மாணவர்களுக்கு இடையே ஏற்கனவே இருந்து வந்த கோஷ்டி மோதலால் ஏற்பட்ட பிரச்சனை எனக் கூறிய நிலையில், அமைச்சரின் இந்தப் பதிலுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
