லக்னோவின் ரஹீமாபாத் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இழிவான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு 75 வயதான சத்ரபால் என்பவர் உயிரிழந்த நிலையில், அவருடைய ஒரே மகனான மகேந்திரா, சொத்தைக் கைப்பற்றுவதற்காகத் தனது தந்தையின் சடலத்திலிருந்து பெருவிரல் ரேகையை வெற்றுத் தாள்களில் பதித்துள்ளார்.
விசாரணையின்படி, சத்ரபால் தனது வாழ்நாளில் மகனால் கொடுமைப்படுத்தப்பட்டதால், அவரைத் தனது சொத்திலிருந்து முறைப்படி நீக்கி, நிலத்தைத் தனது மகள்களின் பெயருக்கு மாற்றி எழுதியிருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 9 அன்று தந்தை இறந்ததைத் தொடர்ந்து, அந்தச் சொத்துக்களை முறைகேடாகப் பறிப்பதற்காகத் தனது உறவினர் ஒருவருடன் இணைந்து மகன் மகேந்திரா இந்த இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார்.
https://twitter.com/AnuragChaddha/status/2087900200170115491/video/1
சம்பவ இடத்தில் இருந்த கிராம மக்கள் சிலர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து, அது வேகமாக வைரலானது. இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு ரஹீமாபாத் காவல்துறையினர் வழக்கை கையில் எடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட மகன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
