திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம்(64). இவரது மனைவி வெங்கடேஸ்வரி(54). இந்த தம்பதியினருக்கு வெற்றிச்செல்வன் என்ற மகனும், கோமதி என்ற மகனும் உள்ளனர். சென்னையில் ஆடிட்டராக வேலை பார்க்கும் வெற்றி செல்வன் தனது தந்தைக்கு சொந்தமான மற்றொரு வீட்டை விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என கேட்டு தகராறு செய்து தந்தை ஆதிமூலத்தை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த ஆதிமூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அதிமூலம் தனது மனைவியுடன் வேறு ஒரு வீட்டில் குடியேறினார். நேற்று முன்தினம் இரவு வெற்றி செல்வன் தனது தாயை பார்க்க வந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வெற்றி செல்வன் வெங்கடேஸ்வரியை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வெற்றி செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
