ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ள நிலையில், இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பகிரங்கமான மத்தியஸ்தராகச் செயல்பட்டாலும், இதன் பின்னணியில் சீனாவின் மிக முக்கிய ராஜதந்திர பங்கு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதில் சீனாவின் பங்கு இருந்ததா? என்ற கேள்விக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “ஆம், கேள்விப்பட்டேன்” என்று பதிலளித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் போது, ஹார்முஸ் ஜலசந்தியில் தனது ராணுவக் கண்காணிப்புடன் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஜலசந்தியைத் திறக்க ஈரான் சம்மதித்ததே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஈரானின் பொதுக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவியது. “ஒரு நாகரிகமே அழியப்போகிறது” என்று ட்ரம்ப் விடுத்த மிரட்டலால் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இருப்பினும், ஈரானுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள சீனா அளித்த அழுத்தமே, ஈரான் தனது பிடிவாதத்தைக் குறைத்து ஹார்முஸ் ஜலசந்தியைத் தற்காலிகமாகத் திறக்கக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சீனா இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது.
அதேசமயம், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைச் சீனா மற்றும் ரஷ்யா தங்களது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தன. அந்தத் தீர்மானம் போரின் மூல காரணத்தைச் சரியாகக் கையாளவில்லை எனச் சீனா வாதிட்டது. இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அடுத்தகட்டமாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் மே 14-15 ஆகிய தேதிகளில் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
