ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள “ரத்னம்” திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ளனர்.
“தாமிரபரணி”, “பூஜை” ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு ஹரி விஷாலுடன் “ரத்னம்” திரைப்படத்தில் இணைந்துள்ளார். முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் வகையில் ஒரு ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.
இத்திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே விஷாலும் ஹரியும் பல ஊடகங்களில் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இத்திரைப்படத்தின் கதாநாயகியான பிரியா பவானி ஷங்கர் “ரத்னம்” திரைப்படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புரொமோஷனிலும் தலைகாட்டவே இல்லை. இது குறித்து விஷாலிடம் ஒரு முறை கேட்டபோது, “பிரியா பவானி ஷங்கர் வேறு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்” என கூறினார்.
இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் இது குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது பிரியா பவானி ஷங்கர் “ரத்னம்” திரைப்படத்தின் புரொமோஷன் விழாக்களுக்கு வருவதற்கு தயாராகவே இருந்தாலும் அவருக்கு முறையான அழைப்பு விடுக்கவே இல்லையாம். ஆதலால்தான் அவர் “ரத்னம்” படத்தின் புரொமோஷன் பணிகளுக்கு வருவதில்லை என கூறியிருக்கிறார்.