“ஏசி-யும் இல்லை… கரண்ட்டும் இல்லை..!” – கொதிக்கும் மும்பையில் கடற்கரையே வீடான அவலம்…!

By Swetha on ஆனி 19, 2026

Spread the love

மும்பையில் நிலவி வரும் கடுமையான வெயில், அதிகப்படியான உஷ்ணம் மற்றும் தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பையின் வெர்சோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள், இரவில் தங்கள் வீடுகளில் இருக்க முடியாமல் வெர்சோவா கடற்கரையின் மணற்பரப்பில் திறந்தவெளியில் படுத்து உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இப்பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக மின்வெட்டு அறிவிக்கப்படாவிட்டாலும், கடுமையான வெயிலின் தாக்கம் மற்றும் மின்தேவை அதிகரிப்பால் தினமும் 1 முதல் 9 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. தகரக் கூரைகளைக் கொண்ட சிறிய குடிசை வீடுகள் பகல் முழுவதையும் வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்வதால், இரவிலும் வீட்டின் வெப்பநிலை குறையாமல் தணலாகக் கொதிக்கிறது. போதிய காற்றோட்டம் இல்லாததாலும், மின்விசிறிகள் இயங்காததாலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி, வேறு வழியின்றி குளிர்ந்த கடல் காற்றுக்காக இரவு நேரத்தில் கடற்கரையை நோக்கி தஞ்சமடைந்து, மீண்டும் காலையில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.

   

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மும்பைக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த கடுமையான உஷ்ணத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மழையின்மை காரணமாக வெயில் மட்டுமின்றி, மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதால், மும்பை மாநகராட்சி நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மும்பை மக்கள் இந்த கடுமையான வெயில், உஷ்ணம் மற்றும் மின்வெட்டு துயரத்திலிருந்து தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என்று பருவமழையின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.