உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ரச்னா தேவி. கணவரை இழந்த நிலையில், தனது பெற்றோருடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். ரச்னாதேவி, தனக்கிருந்த பிரச்சனையை தீர்க்க அருகில் உள்ள கிராமத்தில், பஞ்சாயத்து தலைவரான சஞ்சய் பட்டேலிடம் உதவி கேட்டார். அந்தப் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி இருவரும் சந்தித்த நிலையில், அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறி, பலமுறை தனிமையில் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் ரச்னா தேவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சஞ்சய் பட்டேலை வற்புறுத்தியதை தொடர்ந்து, அவரும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல நாட்களைக் கடத்தினார். மேலும் ரச்னா தேவி வற்புறுத்தியால், ஆத்திரமடைந்த சஞ்சய், ரச்னா தேவியை கொலை செய்ய திட்டமிட்டார். வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு ரச்னா தேவியை வரவழைத்து, தனது மருமகன் சந்தீப் பட்டேலுடன் சேர்ந்து, ரச்னா தேவியை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார். இதில் ரச்னா தேவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின் ரச்னா தேவியின் உடலை, 7 துண்டுகளாக வெட்டி, அவர் உடல் பாகங்களைப் பிரித்து, சாக்கு மூட்டையில் கட்டினர். அதில் ஒரு சாக்கு முட்டையை கிணற்றிலும், மற்றொரு சாக்கு மூட்டையை பாலத்திற்கு அடியிலும், வீசி சென்றுள்ளனர்.
இந்நிலையில் தனது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த விவசாயி, கிணற்றில் ஒரு சாக்கு மூட்டை மிதப்பதை பார்த்தார். பின் அங்கிருந்தவர்களின் உதவியுடன், மூட்டை பிரித்துப் பார்த்த பொழுது, ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கைகள் இருந்ததை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விவசாயி தோடிபதேபூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இறந்த பெண்ணின் தலை கிடைக்காததால், குழப்பம் அடைந்த போலீசார் மேலும் தேடுகையில், அருகில் இருந்த லகேரி ஆற்றில் இருந்து அந்தப் பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ள, போஸ்டர் அடித்து அருகில் உள்ள கிராமங்களில் கொடுத்தனர். ரச்னா தேவியின் சகோதரன், போஸ்டரை பார்த்து போலீசாரை அணுகினார். ரச்னா தேவியின் சகோதரன் கொடுத்த தகவலின் பெயரில், கொலை செய்த சஞ்சய் பட்டேல் மற்றும் அவரது மருமகன் சந்தீப் பட்டேலை உடனடியாக போலீசார் கைது செய்தனர். இந்தக் கொலைக்கு உதவியாக இருந்த வேறுஒரு நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
