ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான எச்சரிக்கை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு, சில காலம் கழித்து அதனைப் புதுப்பித்தால், இடையில் உரிமம் இல்லாத அந்த நாட்களையும் சேர்த்து ‘தொடர்ச்சியாக உரிமம் வைத்திருந்ததாக’ இனி கருத முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை போன்ற அரசு வேலைகளுக்கு ‘தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் உரிமம் பெற்றிருக்க வேண்டும்’ என்ற விதி உள்ள சூழலில், ஒரு நாள் இடைவெளி விழுந்தால் கூட அந்த விண்ணப்பதாரர் தகுதியற்றவர் ஆவார்.
2019-ம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி, பழைய சட்டத்தில் இருந்த 30 நாள் சலுகை காலம் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, உரிமம் முடிந்த அன்றே அது செல்லாததாகிவிடும்; அதனைப் புதுப்பிக்கும் போது பழைய தேதியிட்டு (Back date) வழங்கினாலும், அது வேலைவாய்ப்புக்கான தகுதிக் கணக்கீட்டில் செல்லாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா அரசுப் பணி நியமனம் தொடர்பான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் உரிமம் காலாவதியாகும் முன்பே விழிப்புடன் புதுப்பித்துக்கொள்வது அரசு வேலை கனவில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.
