அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் மற்றும் பிரிவினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “இனி நமக்குள் பிரிவில்லை” என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஐடி விங் (IT Wing) எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில், “எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசிய வரலாற்றுச் சிறப்புமிக்க வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. மேலும், கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது என்றும், இனி தங்களுக்குள் பிரிவில்லை என்றும், கோட்டையில் மீண்டும் இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே தங்களது ஒரே இலக்கு என்றும் அந்தப் பதிவில் மிகவும் நெகிழ்ச்சியோடு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் எஸ்.பி. வேலுமணி தலைமையில் பிரிந்து சென்று தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளது உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்று காலை சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி அணியினர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர்கள், இபிஎஸ்-ஸின் தலைமையை ஏற்க வேண்டுமானால், தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளை மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்றும், தங்களுக்கு எதிராகச் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டப் புகார்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆரம்பத்தில் இபிஎஸ் இந்த இரு கோரிக்கைகளையும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகத் தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே “இனி பிரிவில்லை” என அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் எதிர்காலம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, அதிருப்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி முழுச் சம்மதம் தெரிவித்துள்ளதையே இந்த சமூக வலைத்தளப் பதிவு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக அதிமுகவுக்குள் நீடித்து வந்த மெகா உட்கட்சிப் போர் ஒரு சுமுகமான முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், திமுகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க இபிஎஸ் தரப்பு முயன்றதாகக் கூறி சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கொறடா உத்தரவை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இபிஎஸ் தரப்பும், பெரும்பான்மை ஆதரவோடு வேலுமணியைச் சட்டமன்றக் குழுத் தலைவராக்கச் சி.வி. சண்முகம் தரப்பும் சபாநாயகரிடம் மனுக்களை அளித்து மோதிக்கொண்டனர். இதற்கிடையே வேலுமணி அணியில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் இபிஎஸ் பக்கமும், 4 பேர் தவெகவிலும் ஐக்கியமான நிலையில், தற்போது எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த அணியையும் முழு வேகத்தில் தாய்க் கழகத்தில் இணைப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக அரங்கேறி வருகின்றன.
