நடிகர் அஜித்தின் ‘வீரம்’ படத்தில் தம்பியாகவும், இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியாகவும் தமிழ் திரையுலகில் அறியப்படுபவர் நடிகர் பாலா. இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு பாடகி அம்ரிதா என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு மகளும் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2019இல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது கோகிலா என்பவரை மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் பாலாவுக்கு, அவரது முதல் மனைவியால் மீண்டும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாயை மகள் பெயரில் ஃபிக்சட் டெபாசிட் (FD) செய்துவிட்டதாகவும், ஆனால் தற்போது தனது முன்னாள் மனைவி தன்னிடம் 120 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி, கடுமையான மன உளைச்சலைத் தருவதாகவும் பாலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கண்ணீருடன் பேசியுள்ள நடிகர் பாலா, தனது குடும்பத்தில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் இதுவரை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இனிமேல் யாராவது தேவையில்லாமல் என்னைப் பற்றிப் பேசினால், நிச்சயம் ஒரு பிரஸ் மீட் (Press Meet) கூட்டி அனைத்து உண்மைகளையும் ஆதாரத்துடன் உடைப்பேன். நான் சொல்ல வரும் உண்மைகள் வெளியில் வரக்கூடாது என்று நினைத்தால், என்னையும், என் தற்போதைய மனைவியையும் விஷம் வைத்துக் கொன்றுவிடுங்கள்” என மிகவும் ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசியுள்ளார். இந்த அதிர்ச்சிப் பேட்டி தற்போது சினிமா வட்டாரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
