ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி உத்திரா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியில் சேர்ந்தார். இதற்காகக் கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி பணிக்குச் சென்ற உத்திரா வீடு திரும்பாததால், அவரது கணவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.
சுமார் ஐந்து நாட்களுக்குப் பிறகு, விஜயமங்கலம்–பெருந்துறை சாலையில் பொன் நகர் முட்புதர் பகுதியில் உத்திரா நிர்வாண நிலையில் அழுகிய சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விரிவான விசாரணையில், உத்திராவுடன் அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சரவணன் என்ற ஆண் செவிலியர் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது. உத்திரா அணிந்திருந்த 4 சவரன் தங்கத் தாலிக்கொடியைப் பறிப்பதற்காகவே இக்கொலையைச் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சரவணனைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
