காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூரைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான ராஜேஸ்வரிக்கும், படப்பை அடுத்த அழகூரைச் சேர்ந்த சட்டப் படிப்பு முடித்த தீபக் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் இருவரும் சுமுகமாக வாழ்ந்து வந்த நிலையில், சில வாரங்களிலேயே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தீபக், அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் துயரத்தை ராஜேஸ்வரி தனது தாயிடம் கூறி அழுதபோதும், குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு பொறுமையாக வாழுமாறு தாயார் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இந்தச் சூழலில், கணவன் – மனைவி இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தீபக் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில், மனவேதனையில் இருந்த ராஜேஸ்வரி படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது மைத்துனர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை உடனடியாக மீட்டு படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
தகவலறிந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால், வரதட்சணைக் கொடுமை அல்லது குடும்பத் தகராறு போன்ற பின்னணிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
