அதிமுகவில் வெடித்தது அடுத்த அதிரடி… என் நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி…எடப்பாடியாருக்கு எதிராக ‘பொங்கி எழுந்த’ எம்.ஆர்.விஜயபாஸ்கர்…!

By SATHISH R on ஆடி 1, 2026

Spread the love

அதிமுக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிரடி திருப்பமாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சியின் தலைமைக்கு எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “தீய சக்திகளுடன் கைகோர்த்து, திமுக தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த ஒரு பேரியக்கம், தங்களின் கொள்கை எதிரியான திமுகவுடன் சமரசம் செய்துகொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், கரூரில் தான் சந்தித்தது வெறும் அரசியல் போட்டி மட்டுமல்ல, அப்பட்டமான அதிகார அடக்குமுறை என்று தனது வேதனையை அவர் பகிர்ந்துள்ளார். தன் மீது 43 பொய் வழக்குகளும், தன் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் மீது 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகளும் பாய்ந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தனை அராஜகங்களையும் தாங்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி, கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தனை தியாகங்களுக்கும், வேதனைகளுக்கும் பரிசாக இன்று தன் நெஞ்சில் துரோக ஈட்டி பாய்ந்துள்ளதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

   

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சாடியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர், “அண்ணன் எடப்பாடியார் அவர்களே… நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை” என்று தெளிவாகக் கூறியுள்ளார். தொண்டர்களின் தார்மீக உணர்வுகளை மதிக்காமல் தலைமை எடுத்த தன்னிச்சையான, சந்தர்ப்பவாத முடிவே இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது என்றும், இந்த சுயநல முடிவிற்குப் பலியாகத் தான் தயாராக இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

   

இறுதியாக, இந்த இயக்கத்திற்காகத் தனது உழைப்பையும், வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ள அவர், மிகுந்த மன வேதனையுடனும் மீளா கண்ணீருடனும் அதிமுகவிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தனது அரசியல் பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், “என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே… உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும்” என்று கூறி, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான வாசலைத் திறந்து வைத்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த அதிரடி விலகல், அதிமுக உட்கட்சி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.