மகாராஷ்டிர மாநிலம், கச்சிரோலி மாவட்டத்தில் உள்ள போகாபூர் கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வளர்ந்தவர் 20 வயதான அரவிந்தா. இவரது தந்தை கடந்த 2005-ஆம் ஆண்டில் தன் வேலையைத் துறந்துவிட்டு நக்சல் அமைப்பில் இணைந்ததால், இவர்களது குடும்பம் வறுமையிலும் கடும் துயரத்திலும் சிக்கியது. கைக்குழந்தையான அரவிந்தாவைத் தூக்கிக்கொண்டு அவரது தாய் லதா காடு மேடெல்லாம் கணவரைத் தேடி அலைந்து பல இன்னல்களை அனுபவித்தார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 2010-ஆம் ஆண்டில் தந்தை காவல்துறையிடம் சரணடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். இந்த நெருக்கடியான சூழலிலும், குடும்பத்தின் வறுமையையும் தனது தாயின் கஷ்டங்களையும் கண்முன் பார்த்தே அரவிந்தா வளர்ந்தார்.
பல சவால்களைத் தாண்டி தனது கல்வியில் முழு கவனம் செலுத்திய அரவிந்தா, கடந்த ஆண்டு சிவில் பொறியியலில் பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அவரது விடாமுயற்சியின் பலனாக, தற்போது ‘லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி’ நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளராக அவருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தனது தாயின் தியாகத்திற்குத் தன்னால் ஒரு நல்ல பலனைத் தர முடிந்ததில் பெருமிதம் கொள்ளும் அவர், இந்த வேலையுடன் நின்றுவிடாமல் வேலைப் பார்த்துக்கொண்டே பி.டெக் படிப்பதையே தனது அடுத்தகட்ட இலக்காகக் கொண்டுள்ளார். ஒரு காலத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருந்து, சமீபத்தில் மத்திய அரசால் நக்சல்கள் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கச்சிரோலியில் இருந்து வந்த ஒரு பெண்ணின் இந்த சாதனை பலருக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
