கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இத்திட்டத்தின்படி, விற்கப்பட்ட பாட்டில்களில் 99 சதவீதம் வரை அரசுக்குத் திரும்பப் பெறப்பட்டதாக முந்தைய ஆட்சியில் கணக்கு காட்டப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் அரசுக்கு மாதந்தோறும் சுமார் 4,800 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டிருக்க வேண்டும் என்று விளக்கமளித்தார்.
ஆனால், கள நிலவரப்படி அதிகபட்சமாக 61 சதவீத பாட்டில்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் தெரிவித்த அமைச்சர், கணக்கைக் காட்டியதற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள இந்த மாபெரும் முரண்பாடு குறித்தும் நிதி இழப்பு குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீதும், முறையான கணக்கு காட்டாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவையில் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
