மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது மும்பை காவல்துறை துறைரீதியான விசாரணை உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ நடத்திய போராட்டத்தின் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காவல் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களிடம், காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் பவன் சங்கி என்பவர், “மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால் உங்கள் பைகளில் 50 கிராம் போதைப்பொருள் பவுடரை வைத்து உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடுவேன்” என மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய மும்பை காவல்துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, காவலர் பவன் சங்கியை அவரது தற்போதைய பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை வெளிவந்த பிறகு அவர் மீது அடுத்தகட்டக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை வாட்ஸ்அப் மூலம் நேரலை இருப்பிடத்தைப் பகிரச் சொல்வது, வீடுகளுக்கே சென்று எச்சரிப்பது மற்றும் அதிகாலையிலேயே டிஜிட்டல் முறையில் நோட்டீஸ் அனுப்புவது போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
