உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் வசிக்கும் ஒரு பெண், தன் கணவனுக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார். தங்க நகை வாங்க வேண்டும் என்ற ஆசையில், வீட்டின் அலமாரியிலிருந்த பெட்டி ஒன்றில் இந்தப் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து வைத்துள்ளார். சுமார் 8 ஆண்டுகளில் அவர் சேமித்த தொகை ரூ 12 லட்சத்தை நெருங்கியிருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைகளை வாங்கத் திட்டமிட்டு, அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. பெட்டிக்குள் இருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளையும் எலிகள் கடித்துக் குதறி, சிறு சிறு துண்டுகளாக ஆக்கியிருந்தன. தன் வாழ்நாள் சேமிப்பு மொத்தமும் பாழானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வேறு வழியின்றி இந்தத் தகவலைத் தன் கணவரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்.
https://twitter.com/Asifansari9410/status/2091229258731721089/video/1
மனைவி ரகசியமாகச் சேமித்த பணத்தைக் கண்டு கணவர் அதிர்ச்சியடைந்தாலும், சேதமடைந்த ரூபாய் நோட்டுத் துண்டுகளை ஒன்றாகச் சேர்த்து எண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது அந்த ரூபாய் நோட்டுகளைப் பிரித்தெடுத்து கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன. கிழிந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்ற முடியுமா என்ற நோக்கில் அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
