போடு ரகிட ரகிட..! முதலமைச்சர் விஜய் அரசுக்குக் கிடைத்த முதல் வெற்றி.. டாஸ்மாக் மாமூல் கலாச்சாரம் முற்றிலும் மாறியது..!!

By Swetha on ஆனி 5, 2026

Spread the love

தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு, டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளில் முதல் வெற்றி கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோதமாக வசூலிக்கப்படும் மாமூல் தொகை கடந்த ஒரு மாதமாக வசூலிக்கப்படவில்லை என டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாதத்திற்கு சுமார் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டும் பெரிய டாஸ்மாக் கடைகளில் இருந்து, அதிகாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை மாமூல் கொடுக்கப்படுவதாகப் புகார்கள் நீண்டநாட்களாக இருந்து வந்தன. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் இப்பணம் எங்கும் கொடுக்கப்படவில்லை என்று பணியாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடுகளை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் விஜய், கோவில்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த சுமார் 717 அரசு மதுபானக் கடைகளை மூட ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கொள்முதல் நிலை முதல் சில்லறை விற்பனை வரை ஒட்டுமொத்த டாஸ்மாக் செயல்பாடுகளையும் முழுமையாகக் கண்காணித்து நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய இந்த மாமூல் ஒழிப்பு நடவடிக்கை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சகத்தின் தீவிர கண்காணிப்பால் சாத்தியமாகியுள்ளதாகவும், இது புதிய அரசுக்குக் கிடைத்த முக்கிய தொடக்க வெற்றியாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.