ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்கும் போது அவர் பெண் உடைகளை அணிந்து, முகத்தில் ஒப்பனை செய்திருந்தார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அணிந்திருந்த அந்தப் பெண் ஆடைகளை அவரே தைத்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் எந்தவொரு தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்படாததால், அவர் ஏன் இந்த தீவிர முடிவை எடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் திருநங்கையர் சமூகத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவருடைய நடத்தையிலும் மாற்றங்கள் இருந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சிவப்பு ஆடை அணிந்த பெண் ஒருவர் தனக்குத் தெரிவதாகச் சமீபநாட்களாக அவர் கூறிவந்ததாகவும் அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த கல்தா கேட் காவல்துறையினரும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். முன்னாவின் மொபைல் போன் பதிவுகள், குடும்பச் சூழல் மற்றும் மனநிலை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகள் வந்த பிறகே அவரது இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும், அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
