முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்… செம கடுப்பில் தவெக அமைச்சர்கள்…. முதலமைச்சரிடம் பறந்த அதிரடி புகார்…!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வரும் சூழலில், பேரவை நிகழ்வுகள் சுவாரசியமாகவும் காரசாரமாகவும் நகர்ந்து வருகின்றன. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையைத் திறம்பட வழிநடத்தி வருகிறார் என்ற ஒருதரப்பு கருத்து நிலவினாலும், அவரது நடுநிலையான மற்றும் கட்டுப்பாடான செயல்பாடுகள் ஆளுங்கட்சியான த.வெ.க. உறுப்பினர்களிடையே சில அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொறுப்பேற்றது முதலே சபாநாயகர் கவனமாக செயல்பட்டு வருகிறார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என இரு தரப்பிற்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி பேரவையை அமைதியாக கொண்டு செல்ல முயலும் அவர், தேவைப்படும் இடங்களில் அதிரடி முடிவுகளையும் மேற்கொள்கிறார். குறிப்பாக, அமைச்சர்களின் உரைகளின் போது குறுக்கிடுவது, நீண்ட நேரம் பேசுவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அவை குறிப்பிலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் ஆளுங்கட்சியினரை சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளன.

   

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் த.வெ.க. அமைச்சர்கள் கடந்த கால திமுக ஆட்சியின் சம்பவங்களைக் சுட்டிக்காட்டி பேச முயலும்போது, சபாநாயகர் குறுக்கிட்டு சுருக்கமாகப் பேசுமாறு அறிவுறுத்துகிறார். கருத்துகளை அவை குறிப்பிலிருந்து நீக்குவதாலும், நேரக் கட்டுப்பாட்டைக் கடுமையாகப் பின்பற்றுவதாலும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்றோர் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளை முழுமையாக அம்பலப்படுத்த முடியாமல் போவதாக அவர்கள் கருதுவதாகவும் பேசப்படுகிறது.

   

இதன் விளைவாக, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் த.வெ.க.வின் உள்வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. “ஆளுங்கட்சிக்கு உரிய சலுகைகளை மறுக்கக் கூடாது; சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவது போல் தெரிகிறது” என ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

 

அதேவேளையில், அனுபவம் குறைந்த உறுப்பினர்களைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த சபாநாயகரின் இந்த கண்டிப்பான அணுகுமுறை மிகவும் அவசியம் என்று மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பேரவையை நடுநிலையோடு நடத்துவது அரசின் நற்பெயருக்கே உதவும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.