ஜெர்மனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அக்டோபர் 13ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர். தீயுடன் அடர்ந்த புகையும் பரவியதால் கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். மீட்புப் பணியின்போது இரண்டாவது மாடியில் 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்களும், 26 வயதுடைய ஓர் இளைஞரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். மேலும் ஐவர் புகையைச் சுவாசித்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படிக்கட்டுப் பகுதியிலேயே தீ கடுமையாகப் பரவியதால் தீயணைப்புப் படையினரால் வழக்கமான வழியைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் உயரமான ஏணிகள் மற்றும் பாதுகாப்பு மெத்தைகளைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் மின்சாரக் கோளாறு போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் தீ ஏற்படவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து, அதே கட்டடத்தில் வசித்து வந்த 41 வயது ருமேனிய நாட்டைச் சேர்ந்த நபர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தைய ஞாயிற்றுக்கிழமை அதே கட்டடத்தில் நடந்த தகராறுக்கும் இந்தத் தீ விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிறப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
