கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மற்றும் மான்யா பாட்டீல் என்ற கல்லூரி மாணவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பெண்ணின் வீட்டார் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு கருதி வெளியூரில் வசித்து வந்தனர்.
தற்போது மான்யா 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், உறவினர்கள் சமாதானமாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் சொந்த ஊரான இனாம் வீராபூர் கிராமத்திற்குத் திரும்பியுள்ளனர். ஆனால், மகளின் வருகை தந்தை பிரகாஷுக்கு மேலும் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில், பிரகாஷ் தனது உறவினர்களுடன் ஆயுதங்களை ஏந்தி மகளின் வீட்டிற்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டார். இதில் 7 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மான்யாவை இரும்பு பைப்பாலும், மண்வெட்டியாலும் அவரது தந்தையே கொடூரமாகத் தாக்கினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த மான்யா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மாமனார், மாமியார் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தந்தை பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
