“நான் இறந்துவிட்டேனா..? என்னை தகனம் செய்யுங்க…” SIR பட்டியலை பார்த்து மயானத்திற்கு கிளம்பிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

மேற்கு வங்கத்தில் உயிருடன் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நகராட்சி கவுன்சிலர் ஒருவரை, தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா அருகே உள்ள டங்குனி நகராட்சியைச் சேர்ந்த சூர்யா தே என்ற அந்தப் பிரதிநிதியின் பெயர், சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ‘மரணமடைந்தவர்’ எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியான தகவலை அறிந்த கவுன்சிலர், அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டிக்கும் வகையில் ஒரு வினோதமான போராட்டத்தை முன்னெடுத்தார்.

   

தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக ஒரு மயானத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்த அதிகாரிகளிடம் “அரசு ஆவணப்படி நான் இறந்துவிட்டதால், என்னை இங்கேயே தகனம் செய்துவிடுங்கள்” எனக் கூறி தர்க்கம் செய்தார். மக்கள் பிரதிநிதியான எனக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

   

அந்த மாநிலத்தில் மட்டும் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அரசு நிர்வாகத்தின் மீது பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தவறுகள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.