உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பட்டி கும்ஹாரா கிராமத்தில், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான யாசூல் மற்றும் 18 வயதான முஸ்கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் முஸ்கான் திருமணக் கோலத்தில் மணப்பெண் அலங்காரத்தில் இருந்த நிலையில், இருவரும் ஊரின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டின் அருகே இருந்த மரத்தில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த இருவரும் காதலித்து வந்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கும் நிலையில், இருவரின் குடும்பத்தினரும் இக்காதல் விவகாரத்தை மறுத்து வருகின்றனர். மதம் கடந்த இக்காதல் விவகாரம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
